விண்டோஸ் 8 தந்த சினோப்ஸ்கி விலகல்

30/11/2012 16:33

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 வெளியான இரண்டு வாரத்திற்குப் பின்னர், அதனை வடிவமைத்த பொறியாளர் குழுவின் தலைவராக இயங்கிய ஸ்டீவன் சினோப்ஸ்கி, நிறுவனத்திலிருந்து விலகி உள்ளார். இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மரின் இடத்தில், அவருக்குப் பின் பணியாற்றுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்த திருப்பம் ஏற்பட்டுள்ளது. 
1989 ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றிய சினோப்ஸ்கி பல ஆண்டுகள், பில் கேட்ஸின் தொழில் நுட்ப ஆலோசகராகவும் இயங்கினார். விண்டோஸ் விஸ்டா, வாடிக்கையாளர்களிடம் எடுபடாமல் போன பின்னர், விண்டோஸ் 7 மூலம் மைக்ரோசாப்ட் புகழைத் தூக்கி நிறுத்தியவர் சினோப்ஸ்கி. கடந்த மூன்று ஆண்டுகளாக, விண்டோஸ் 8 வடிவமைப்புக் குழுக்களுக்குத் தலைவராக இயங்கினார். 
சிநோப்ஸ்கி தான் திறம்பட பணி செய்திட இடம் கொடுத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மனதார நன்றி தெரிவித்துள்ளார். தலைமை நிர்வாக அதிகாரி பால்மரும், சிநோப்ஸ்கியின் பணிக் கலாச்சாரத்தினை பாராட்டி வாழ்த்தியுள்ளார். 
சிநோப்ஸ்கியின் தளபதியாகப் பணியாற்றிய லார்சன் கிரீன், அவரின் இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இது தன்னுடைய சொந்த முடிவு என சிநோப்ஸ்கி அறிவித்த போதும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் யார் பெரியவர் என்ற பிரச்னை எழுந்திருக்கலாம் என்று பலர் சந்தேகிக்கின்றனர். எப்படி இருந்தாலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மொபைல் சிஸ்டங் களின் முக்கியத்துவத்தினை உணர்த்தி, விண்டோஸ் 8 சிஸ்டத்தினை வடிவமைத்தவர் என்ற வகையில், சிநோப்ஸ்கி சிறந்த இடம் பெற்றுள்ளார்